இந்தியாவிலுள்ள மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 125 SUVக்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் அவர்களிடம் 2022 டிசம்பர் 22ஆம் திகதி வைபவரீதியாக கையளிக்கப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.ஹெட்டியாராச்சி மற்றும் பொலிஸ் மா அதிபர் திரு.சி.டி.விக்ரமரத்னே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
2. இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி திட்டத்தின்கீழ், இலங்கையின் சட்ட அமுலாக்கல் துறையினர் மற்றும் ஆயுதப் படையினருக்காக வழங்கப்படவிருக்கும் 500 வாகனங்களில் முதற்தொகுதியாகவே இந்த 125 SUVக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வாகனங்கள் இலங்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும் நாடளாவிய ரீதியில் சேவைகளை மேம்படுத்தவும் உறுதுணையாக அமையும்.
3. இந்தியாவும் இலங்கையும் பன்முக மற்றும் பல்துறை ஒத்துழைப்பினை பகிர்ந்துகொள்கின்றன. இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் அடிப்படையில் சலுகை கடன்களின் மூலமான திட்டப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை இந்தியா இலங்கைக்கு வழங்கிவருகிறது. இந்நிலையில் இந்த உதவிகள் தற்போதைய சூழ்நிலையிலும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது. புகையிரதம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க சக்தி, பெற்றோலியப் பொருட்கள் மற்றும் உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனுதவி இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, கடந்த மார்ச்சில் உணவு, மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்றவற்றின் விநியோகத்திற்காக இந்திய ஸ்டேட் வங்கி ஊடாக இலங்கை அரசாங்கத்துக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
23 டிசம்பர் 2022.