*விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான மழை பெய்வதால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சாத்தனூர் அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு 118 அடியாக உயர்ந்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பரவலான மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி, நேற்று அதிகாலை வரை பரவலான மழை பெய்தது. அதன்படி, மாவட்டத்தில், அதிகபட்சமாக செங்கத்தில் 36.80 மிமீ மழை பதிவானது.
அதேபோல், திருவண்ணாமலை 7 மிமீ, தண்டராம்பட்டு 26.40 மிமீ, கலசபாக்கம் 32 மிமீ, கீழ்பென்னாத்தூர் 7 மிமீ, சேத்துப்பட்டு 27.40 மிமீ, போளூர் 28.60 மிமீ, ஆரணி 11.80 மிமீ, செய்யாறு 8.30 மிமீ, ஜமுனாமரத்தூர் 19 மிமீ, வந்தவாசி 17 மிமீ, வெம்பாக்கம் 4.50 மிமீ மழை பதிவானது. மேலும், நேற்று பகலிலும் விட்டு விட்டு மழை பெய்தது. லேசான வெயிலும், மிதமான மழையுமாக இதமான சூழ்நிலை காணப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 403 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. 63 ஏரிகள் முழுமையாக நிரம்பும் நிலையில் உள்ளன. மீதமுள்ள ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நிரம்பியிருக்கிறது.மேலும், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில் தற்போது 118 அடி நிரம்பியிருக்கிறது. மேலும், அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7,321 மில்லியன் கனஅடியில், தற்போது 7,079 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.
மேலும், அணைக்கு வினாடிக்கு 2,165 கனஅடி தண்ணீர் வருகிறது. மேலும், அணை நிரம்பும் நிலை உள்ளதால், 2,545 கனஅடிநீர் தென்பெண்ணை வழியாக திறந்துவிடப்படுகிறது. குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 54.51 அடியாகவும், மிருகண்டா அணையின் நீர்மட்டம் 21.16 அடியாகவும், செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 57.04 அடியாகவும் உயர்ந்திருக்கிறது. அதேபோல், இந்த 3 அணைகளுக்கும் தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் முழு கொள்ளளவான 119 அடி நிரம்பியது. அதன்பிறகு போதுமான மழையில்லாத காரணத்தால் அணை முழுமையாக நிரம்பவில்லை. கடந்த 2020ம் ஆண்டும், கடந்த ஆண்டும் கனமழை பெய்தது. ஆனாலும், அணையின் மதகுகள் சீரமைப்பு பணி நடந்ததால், அதிகபட்சம் 99 அடி மட்டுமே நீர் நிரப்ப முடிந்தது.
இந்த ஆண்டு அணையின் மதகுகள் சீரமைக்கப்பட்டதாலும், போதுமான பருவ மழை பெய்ததாலும் அணையின் முழு கொள்ளளவு நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் 119 அடி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், பாசன கிணறுகள், ஏரிகள், அணைகள் என ஒட்டுமொத்த நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பி வருவதால், இந்த ஆண்டு விவசாய சாகுபடி முழுமையாக நடைபெறுவது உறுதியாகியிருக்கிறது. எனவே, விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.