தமிழக அரசாணை எண் 149 ரத்து செய்துவிட்டு தகுதித்தேர்வு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித்தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஒரு பணிக்கு 2 தேர்வுகளை நடத்துவது சமூக அநீதி என்பதால், ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக ஒலிக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த முடிவு பெரும் ஏமாற்றமும், வருத்தமும் அளிக்கிறது. அதிமுக ஆட்சி பொறுப்பில் இருந்தவரையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதற்கான போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்டபோது அப்போதைய எதிர்க் கட்சி தலைவர்
கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என, மு.க.ஸ்டாலின் சூளுரைத்து இருந்தார்.
அதே போன்று திமுக அளித்து இருந்த தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. எனவே அரசாணை எண் 149 கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் தான் முந்தைய அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவை கொஞ்சமும் மாற்றாமல் செயல்படுத்த தற்போது திமுக அரசு தயாராகிக் கொண்டு உள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அதிகப்பட்சமாக 10 ஆண்டுகளாக இன்னமும் வேலை வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக, அவர்கள் தனியார் பள்ளிகளில் மிகவும் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போட்டித்தேர்வு எழுதித்தான் பணியில் அரசாங்க பணியில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியை பெற அவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டும்.
அந்தவகையில், பணம் படைத்த நகர புற மாணவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி கிடைக்க போட்டி தேர்வு வகை செய்கிறது. எனவே இதை சமூக அநீதி என்று பாட்டாளி மக்கள் கட்சி விமர்சிக்கிறது.
எனவே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் பயிற்சி முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் சிலர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2018ம் ஆண்டு போட்டித் தேர்வு திணிக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தனது எதிர்ப்பு பதிவு செய்து இருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் போட்டித் தேர்வை ரத்து செய்வோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் அதுகுறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவில் உறுதியாக இருப்பது, கவலைக்குரிய ஒன்றாக நாங்கள் பார்க்கிறோம்.
எனவே, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணை எண் 149ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.