திருமலை: ஆந்திர தேசிய நெடுஞ்சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்கள் இறங்க சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பிரதமரின் கதி சக்தி மிஷன் திட்டத்தின்கீழ் அவசர காலத்தில் தரையிறங்கும் விமான ஓடுபாதைகள் நாடு முழுவதும் 20 இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டத்தில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ரேணங்கிவரம்- அட்டாங்கி இடையே 4.1 கிமீ நீளம் மற்றும் 33 மீட்டர் அகலம் கொண்ட கான்கிரீட் விமான ஓடுதளம், அதிநவீன ஜெர்மன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டது.
இந்த விமான ஓடுதளம் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. விமானப்படையின் 2 சுகோய்-35 போர் விமானங்கள், உள்நாட்டில் தயாரான 2 தேஜாஸ் எல்சிஏ போர் விமானங்கள் உள்பட 5 விமானங்கள் நேற்று பங்கேற்றன. இந்த விமானங்கள் 100 மீட்டர் தாழ்வாக பறந்தபடி சாலையில் கீழ் வந்து இறங்காமல் மேலே சென்றது. பொதுமக்கள் சாலை ஓடுதளத்தில் வராமல் இருக்க 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விரைவில் தமிழகத்தில் விமான ஓடுதளங்கள்
விரைவில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜம்மு- காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அவசர காலங்களில் விமானங்களை அவசரமாக தரையிறக்க விமான ஓடுதளங்கள் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.