இன்னிங்ஸ், 182 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றது ஆஸ்திரேலியா: தொடரையும் கைப்பற்றியது

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 189 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் இரட்டை சதமடித்து அசத்தினார். டிராவிஸ் ஹெட் (48 ரன்), விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (9 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 145 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேமரூன் கிரீன் 51 ரன்களுடனும் (177 பந்து, 5 பவுண்டரி), ஸ்டார்க் 10 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நோர்டியா 3 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 386 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணியில், கேப்டன் டீன் எல்கர் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய டி புருன் 3 ரன்னில் வெளியேறி இருக்க வேண்டியது. அவர் வழங்கிய கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற வார்னர் கோட்டை விட்டார். தென்ஆப்பிரிக்க அணி7 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டி புருன் 6 ரன்னுடனும், சாரல் எர்வீ 7 ரன்னுடனும் 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இன்றைய ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கியது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியால், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. இறுதியில் அந்த அணி 68.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. தனது 100வது போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய டேவிட் வார்னர் ஆட்டநாயகர் விருதை தட்டிச்சென்றார்.

இரு அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.