கனவு போல் உள்ளது.. துணை கேப்டன் பதவி குறித்து சூர்யகுமார் யாதவ் பதில்

மும்பை,

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இப்போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக கேப்டன் ரோகித் சர்மா 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடவில்லை.

20 ஓவர் போட்டி தொடருக்கு ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டன் பதவிக்கு நியமனம் செய்யப்படுவது தொடர்பாக சூர்ய குமார் யாதவ் கூறியதாவது:-

துணை கேப்டன் பதவியை எதிர்பார்க்கவில்லை. நான் கண்களை மூடிக்கொண்டு என்னை நானே கேட்டு கொண்டேன் இது கனவா என்று. இதை இன்னும் கனவு போல் உணர்கிறேன். அணி அறிவிக்கப்பட்டதும் என் தந்தை எனக்கு அந்த செய்தியை அனுப்பினார். பின்னர் இருவரும் பேசி கொண்டோம். மேலும் அவர் எனக்கு அனுப்பிய செய்தியில், எந்த அழுத்தத்தையும் எடுத்து கொள்ள வேண்டாம். உனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடு என்று கூறி இருந்தார்.

எனது பல வருட கடின உழைப்புக்கு பலன் கிடைத்து உள்ளது. நான் விதைத்த விதைகள், மரமாக வளர்ந்து அதன் பழங்களை அனுபவித்து வருகிறேன். அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இந்தியாவுக்காக விளையாடிய காலத்திலிருந்தே என் மீது எப்போதும் பொறுப்பும், அழுத்தமும் இருந்தது. அதே வேளையில் எனது ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறேன்.

நான் எந்த சுமையையும் எடுத்து செல்வதில்லை. போட்டிக்கு வரும் போது எனது ஆட்டத்தை ரசித்து என்னை வெளிப்படுத்தி கொள்ளவே பார்க்கிறேன். ஹர்த்திக் பாண்ட்யாவுடன் பந்தம் எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது. இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நிறைய சேர்ந்து விளையாடி உள்ளோம். அவரது கேப்டன் ஷிப்பின் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.