கம்பம்: தமிழக எல்லை கம்பம்மெட்டு அருகே கட்டப்பனை கொல்லக்காட்டைச் சேர்ந்தவர் அனில்குமார். கம்ப்யூட்டர் ஆசிரியரான இவர், பணியை விட்டுவிட்டு பல ஆண்டுகளாக இரண்டு ஏக்கர் நிலத்தில் ஏலக்காய் சாகுபடி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் ஏலக்காய் விளைச்சல் பலன் கொடுக்க தொடங்கியது.
முதல்நாள் பச்சை ஏலக்காய் ஒரு கிலோ ரூ.135க்கு விற்பனையானது. இரண்டாவது முறை கிலோ 115 ரூபாயாக குறைந்தது. முன்றாம் முறை பச்சை ஏலக்காய் கிலோ 80 ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாமல் போனதால் விரக்தி அடைந்த விவசாயி அனில்குமார் தன் தோட்டத்தில் இருந்த ஏலச்செடிகளை வெட்டத்தொடங்கினார். ஒரு பகுதியிலிருந்த சுமார் 300 செடிகளை அவர் வெட்டியபோது, அவரது உறவினர் வந்து மீதமுள்ள செடிகளை வெட்டி அழிக்காமல் தடுத்தார்.
இதுகுறித்து விவசாயி அனில்குமார் கூறுகையில், பல மாதங்களாக நிலவி வரும் ஏலக்காய் விலை வீழ்ச்சியை தடுக்க அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு கிலோ காய்ந்த ஏலக்காய்க்கு குறைந்தபட்சம் 1500 ரூபாய் கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் ஏலவிவசாயம் செய்ய முடியும். வெட்டியது போக எஞ்சியுள்ள ஏலக்காய் செடிகளில் விளைச்சல் எடுக்கும் வரை விலை உயரவில்லை என்றால், வாழை போன்ற விவசாயம் பயிரிட உள்ளேன் என்றார்.