பாட்னா: குடியரசு தின அணிவகுப்பில் 7வது ஆண்டாக பீகார் புறக்கணிக்கப்பட்டதாக அம்மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவியேற்று முதன் முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுடன் உரையாற்றுவார்.
தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அன்றைய தினம் பல்வேறு மாநிலங்களின் அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் நடைபெறும். முன்னதாக ஒவ்வொரு மாநிலங்களின் கருப்பொருளை மையப்படுத்திய அணிவகுப்பு விபரங்கள் ஒன்றிய அரசின் வல்லுநர் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும்.
அதன்படி இந்த முறை நடக்கும் விழாவிற்கு, பீகார் மாநிலம் கயாவின் ஃபால்கு ஆற்றின் மீது கட்டப்பட்ட ரப்பர் அணையை பீகாரின் அடையாளமாக காட்சிப்படுத்த வேண்டும் என்று அம்மாநில அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மாநில அரசின் பரிந்துரையை ஒன்றிய அரசின் நிபுணர் குழு நிராகரித்துவிட்டது.
இதற்கான காரணம், முன்மொழியப்பட்ட அட்டவணையில் குடியரசு தின அணிவகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவர் ராஜீவ் சிங் லாலன் கூறுகையில், ‘பீகார் விரோதபோக்கை ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது. பீகாரில் எதுவும் நடக்கவில்லை என்பதைக் காட்ட ஒன்றிய அரசு விரும்புகிறது. பீகாரின் வளர்ச்சி, புதிய சிந்தனை மற்றும் பெரிய திட்டங்களை ஒன்றிய அரசு வெறுக்கிறது. குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தொடர்ந்து 7வது ஆண்டாக பீகார் புறக்கணிக்கப்பட்டுள்ளது’ என்றார்.