சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் காட்டு யானை புகுந்து மக்காச்சோள பயிரை சேதப்படுத்தியதால் ஆவேசமடைந்த விவசாயிகள் வனத்துறை ஜீப்பை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கரளவாடி ரங்கசாமி கோயில் பகுதியில் உள்ள விவசாயி சிவசங்கர் (35) என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிரை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் காட்டு யானையை விரட்டுவதற்காக நீண்ட நேரம் போராடியும் யானையை விரட்ட முடியவில்லை. விவசாயிகள் ஜீப், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி காட்டு யானை விரட்ட முயற்சித்த போது காட்டு யானை ஜீப்பை பிடித்து தள்ளியதால் ஜீப் சாய்ந்து கவிழ்ந்தது. காட்டு யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் தாமதமாக வந்ததாக கூறி விவசாயிகள், வனத்துறை ஜீப்பை முற்றுகையிட்டு சிறை பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளவாடி போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திரகுமார் மீனாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில் ஏற்கனவே ஆசனூர் பகுதியில் காட்டு யானைகளை கண்காணிக்க பொள்ளாச்சியில் இருந்து சின்னத்தம்பி மற்றும் ராமு என்ற இரண்டு காட்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த இரண்டு கும்கிகளையும் தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் கருப்பன் யானையை கண்காணிப்பதற்காக விரைந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.