சுங்க சாவடியை கடந்து செல்ல சுங்ககட்டணம் (fast track) செலுத்துவதற்கு பணம் இல்லாமல் பயணிகளுடன் வந்த அரசு பேருந்து 3 மணி நேரம் சாலையோரம் நிறுத்தப்பட்ட சம்பவம் திருச்சி துவாக்குடியில் நடந்துள்ளது.
திருச்சியிலிருந்து தஞ்சை வரை செல்லும் கும்பகோணம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், துவாக்குடி சுங்கச்சாவடியினை அரசு பேருந்து கடக்க முயன்றபோது அரசு பேருந்திற்கான fast track அட்டை ரீசார்ஜ் செய்யப்படாமல் இருப்பது தெரியவந்தது. சுங்கச்சாவடிக்கான கட்டணம் செலுத்தாததால், அரசு பேருந்தை அனுமதிக்க துவாக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் அப்பேருந்தை சாலையோரம் திருப்பி அனுப்பினார்கள்.
பின்னர் அந்த அரசு பேருந்தில் இருந்த 25க்கும் மேற்பட்ட பயணிகளை கீழே இறக்கி, அவ்வழியாக வந்த மாற்று அரசு பேருந்துகளில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் அனுப்பி வைத்தனர். மேலும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளது உத்தரவு கிடைக்காததால் அரசு பேருந்தானது சுங்கச்சாவடி அருகிலேயே சுமார் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னர் அரசு பேருந்து கழகம் கும்பகோணம் கோட்டம் அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வந்தபிறகு நடத்துனர் சுங்க கட்டணத்திற்காண பணத்தை செலுத்தியதுடன், அதன்பின்னர் பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM