சுயவிளம்பரத்துக்காக மொழி பிரச்னையை தூண்டுவதா? நடிகர் சித்தார்த் மீது போலீசில் புகார்!

மதுரை விமான நிலையம் மூலமாக விமான பயணம் மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் நடிகர் சித்தார்த்தின் பெற்றோர் வந்தபோது அவர்கள் கொண்டு வந்த உடைமையை மதுரை விமான நிலைய பாதுகாப்பு பணியாளர்கள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வீரர்கள் இந்தியில் கூறவே இந்தி தெரியாது என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு வீரர்கள் ஆங்கிலம் பேச மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

மதுரை விமான நிலையத்தில் கூட்டம் இல்லாத நேரத்திலும் 20 நிமிடங்கள் காக்க வைத்து துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்தப் பிரச்னை குறித்து பல்வேறு தரப்பினரும் சித்தார்த்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சோதனையின் பேரில், அவர்களை 20 நிமிடம் நிற்க வைத்து ஹிந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தி துன்புறுத்தியதாக விளம்பர நோக்கத்தோடு தமிழகத்தில் மொழி பிரச்சனையை தூண்டும் விதமாக அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் பணிகளை களங்கப்படுத்தும் விதமாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே திட்டமிட்டு இணையதளத்தில் நடிகர் சித்தார்த் வெளியிட்டதாகவும், இவர்களை விமான நிலையத்தில் சோதனையிடக்கூடாதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழகத்தின் தஞ்சாவூரை சேர்ந்த பெண்தான் விமான நிலையத்தில் சோதனை நடத்தியதாகவும், அவரிடம் சித்தார்த் குடும்பத்தினர் தான் இந்தியில் பேச கட்டாயப்படுத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று சோலைக்கண்ணன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.