சென்னை, வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (64). இவருக்குச் சொந்தமாக அந்தப் பகுதியில் கடைகள், வீடுகள் உள்ளன. அதன்மூலம் மாதந்தோறும் வாடகை பன்னீர் செல்வத்துக்கு கிடைத்து வந்தது. பன்னீர் செல்வத்தின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். அவரின் மகன் ராஜாவுக்கு திருமணமாகி, அவர் குடும்பத்துடன் எம்.கே.பி.நகரில் வசித்து வருகிறார். அதனால் பன்னீர் செல்வம் மட்டும் தனியாக வியாசர்பாடியில் வசித்து வந்தார். இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் செல்போனுக்கு ராஜா தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் ராஜா, வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது காயங்களுடன் வீட்டில் பன்னீர் செல்வம் இறந்து கிடந்தார்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா, வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸார் அங்கு வந்து பன்னீர் செல்வத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த வீட்டில் போலீஸார் சோதனை செய்தபோது பணம் கொள்ளைப் போனது தெரியவந்தது. அதனால் பணத்துக்காக பன்னீர் செல்வம் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பன்னீர் செல்வத்தின் செல்போன் நம்பருக்கு வந்த அழைப்புகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “முதியவர் பன்னீர் செல்வத்தின் சடலத்தில் காயங்கள் உள்ளன. அதனால் அவரை அடித்துக் கொலைசெய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. முதியவர் பன்னீர் செல்வம் தங்கியிருந்த பகுதியில் கடைகள், வீடுகள் உள்ளன. அதனால் கடைகள் பூட்டப்பட்ட பிறகு நள்ளிரவில்தான் இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகுதான் பன்னீர் செல்வம் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியவரும்” என்றனர்.