தகுதி பெறாமல் மருத்துவம் பார்ப்போர் இடங்களில் ரெய்டு!| தகுதி பெறாமல் மருத்துவம் பார்ப்போர் இடங்களில் ‘ரெய்டு!

புதுடில்லி :வெளிநாடுகளில் மருத்துவம் படித்து, இந்தியாவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், போலியான சான்றிதழ் பெற்று மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது தொடர்பாக, நெல்லை, மதுரை உட்பட நாடு முழுதும் 91 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்து விட்டு வருவோர், நம் நாட்டில் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனில், எப்.எம்.ஜி.இ., எனப்படும், வெளிநாட்டு மருத்துவ படிப்புக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், இங்கு சிகிச்சை அளிக்க முடியாது.

போலி சான்றிதழ்

இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன், சீனா மற்றும் ஆப்ரிக்காவின் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில், 2011 – 22ம் ஆண்டுகளில் மருத்துவம் படித்த பலர், எப்.எம்.ஜி.இ., தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என, இந்த தேர்வை நடத்தும், என்.பி.இ., எனப்படும் தேசிய தேர்வு வாரியம் தரப்பில், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது.

இது குறித்து விசாரித்த சுகாதார அமைச்சகம் விரிவான ஆய்வு மேற்கொண்டது.

இதில், எப்.எம்.ஜி.இ., தேர்வில் தேர்ச்சி பெறாமலும், மாநில மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமலும், போலியான சான்றிதழ் பெற்று பலர், மருத்துவ சிகிச்சை அளித்து வருவதை கண்டுபிடித்தது.

இந்த முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சி.பி.ஐ.,க்கு பரிந்துரைத்தது.

முறைகேடு

இதையடுத்து, நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களின் மருத்துவ கவுன்சில் மற்றும் வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு சொந்தமான 91 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இதில், போலி சான்றிதழ் அளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக, 14 மாநிலங்களின் மருத்துவ கவுன்சில்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலி சான்றிதழ் பெற்றதாக, வெளிநாடுகளில் மருத்துவம் படித்த 73 பேர் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

லஞ்சம், குற்றச்சதி, மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ், இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.