சென்னை: தமிழகத்தில் இதுவரை 1.56 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இம்மாதம் 31-ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சர்வர் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால், ஆன்லைன் மூலம் ஆதாரை இணைக்க முடியாமல் நுகர்வோர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை வெளியிட்டது.
இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, 29.12.2022 அன்று வரை, 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் மூலம் 2.27 லட்சமும், ஆன்லைன் மூலம் 1.39 லட்சம் இணைக்கப்பட்டது. இன்று வரை மொத்தம் 1.56 கோடி இணைக்கப்பட்டது” என்று பதிவிட்டுள்ளார்.