தாம்பரம் மாநகர எல்லையில் பொது இடங்களில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட தடை: காவல் ஆணையர் உத்தரவு

தாம்பரம்:  தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31ம் தேதி) மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடும் பொருட்டு கீழ்காணும் அறிவுரைகளை கடைபிடிக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

* 31ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
* 31ம் தேதி மாலை முதல் சுமார் 3,500 காவல்துறையினர், 200 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகனச் சோதனை தாம்பரம் மாநகரம் முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
* தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேம்பாலத்தினை 31ம் தேதி இரவு உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.
* நள்ளிரவு 1 மணிக்கு மேல் தாம்பரம் மாநகர காவல் எல்லையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
* மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

* அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக்களை தவிர்க்கவும் உயிர் சேதத்தை குறைக்கவும் மட்டுமே இந்த நடவடிக்கைகள்.
* வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
* நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என தாம்பரம் மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீச்சல் குளம் மற்றும் மொட்டை மாடியில் எந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கூடாது.
* கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது காவல்துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

* கண்காணிப்பு கேமராக்கள் பொருந்திய ரோந்து வாகனங்கள் மூலம் பொது அனுமதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் துறையினர் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றார்கள். அத்தகையவர்களை பற்றிய தகவலை காவல்துறைக்கு 100 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
* அவசர உதவி தேவைப்படுபவர்கள் கட்டுப்பாட்டு அறை தாம்பரம் மாநகர காவல் தொலைபேசி எண் 044 2450 5959 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அசம்பாவிதம் இல்லாத விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தாம்பரம் மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.