"தெரிந்தே பல சாதிய கொடுமைகள் நடக்கிறது; மக்களுக்கு விழிப்புணர்வு தேவை" – பா.ரஞ்சித்

புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை குறித்து பேசியிருக்கும் இயக்குநர் பா ரஞ்சித், தமிழ்நாட்டில் சமூக நீதி பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில் தான், சாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இசைப் பிரியர்களின் ஆரவாரத்துடன் மார்கழியில் மக்கள் இசை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் தொடங்கிய நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யுவன்ஷங்கர் ராஜா, பேரறிவாளன், அற்புதம்மாள் பங்கேற்றனர்.

image

நிகழ்ச்சியின் நடுவில் செய்தியாளர்களை சந்தித்த பா. ரஞ்சித் பேசுகையில், மார்கழி மக்களிசை நடத்துவதற்கு அரங்குகள் மறுக்கப்பட்டது உண்மை தான். கலைவாணர் உள்ளிட்ட அரங்குகளும் நிகழ்ச்சி நடத்த மறுக்கப்பட்டது. நிகழ்ச்சி நடத்த அரங்குகள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளதை அரசாங்கம் கருத்தில் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

image

புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம் குறித்து பேசிய ரஞ்சித், ”நான் ஒரு நாத்திகன், ஆனால் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பது தவறு. சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டில் சமூக நீதி பேசிக்கொண்டிருக்கும் அதேவேளையில் தான், சாதி ரீதியான ஏற்றத் தாழ்வுகளும் நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்தே பல சாதிய கொடுமைகள் நடந்துவருகிறது. தெரியாமல் பெரும்பான்மையான இடங்களில் சாதிய தீண்டாமை நடந்து தான் வருகிறது. சட்டங்கள் இருந்தும், அரசுகள் மாறினாலும் சாதிய கொடுமை நடந்துகொண்டுதான் வருகிறது. மக்களுக்கு முறையான விழிப்புணர்வு தேவை” என்று கூறினார்.

image

மேலும், இன்று போலவே நாளைக்கான நிகழ்ச்சிக்கும் அனுமதி இலவசம். கடந்த ஆண்டு மதுரை எம்.பி வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் இந்தாண்டு கனிமொழி, உதயநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்களா? என்று கேட்கப்பட்டதற்கு, ”நேரடி அரசியலில் ஈடுபடுவர்கள் இந்தாண்டு தவிர்க்கப்படுகிறார்கள். தவிர்ப்பதற்கு காரணம் ஏதுமில்லை. இந்த முறை சமூக ஆர்வலர்களை அழைக்கலாம் என்ற நோக்கம் தான்” கூறினார்.

தொடர்ந்து தங்கலான் படம் குறித்து பேசிய ரஞ்சித், நடிகர் விக்ரம் அவர்களுக்கு 4 மணி நேரம் சிகை அலங்காரம் செய்யப்படுகிறது. மிகவும் சிறப்பாக படத்தில் நடித்துள்ளார், மக்கள் விரும்பக்கூடிய வகையில் தங்கலான் கண்டிப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.