நோம் பென்-கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 19 பேர் பலியாகினர்; 60 பேர் படுகாயமடைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் போபெட் நகரில் உள்ள நட்சத்திர விடுதியின் ஒரு அறையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால், விடுதியின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். ஆனால், முடியாத நிலையில், கம்போடியா அரசு அண்டை நாடான தாய்லாந்தின் உதவியை நாடியது.
உடனே, தாய்லாந்தின் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக, 12 மணி நேர போராட்டத்திற்குப் பின், தீ கட்டுக்குள் வந்தது.
இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கியும், புகையில் மூச்சு திணறியும், தீயில் சிக்காமல் இருக்க, விடுதியின் மாடியிலிருந்து கீழே குதித்தும் 19 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த பலர் அபாய கட்டத்தில் இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement