புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாதுகாப்பு வழிகாட்டுதல்களை 113 முறை மீறியதாக சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 24ம் தேதி டெல்லி வந்தபோது அதிக அளவில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன. ராகுலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருந்தும் டெல்லி போலீசார் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் ராகுலுக்கான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டிய அவர், ராகுலுக்கு இனிவரும் நாட்களில் உரிய பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உறுதி செய்யும்படி வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டை மத்திய போலீஸ் படை(சி.ஆர்.பி.எப்) அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ராகுல் பின்பற்றவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வழிகாட்டுதல் விதிகளை தலைவர்கள் பின்பற்றும்போதுஅதுசிறப்பாக செயல்படும்.
ஆனால் பல நேரங்களில் ராகுல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் மீறி நடப்பது கவனிக்கப்படுகின்றது. இது குறித்து அவ்வப்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்படும். கடந்த 2020ம் ஆண்டு முதல் 113 முறை பாதுகாப்பு வழிகாட்டுதல்களை ராகுல் மீறியுள்ளார். இதுமட்டுமல்ல டெல்லியில் ஒற்றுமை பயணத்தின்போதும் அவர் விதிகளை மீறியதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.