பணி நிமித்தமாக பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் ஒருவகை என்றால், வேலைக்காக உள்நாட்டிலேயே மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழும் இந்தியர்கள் மற்றொரு வகை.
இந்த வகை தொழிலாளர்களில் உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இவர்கள் தமிழ்நாடு போன்ற பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகள், நெடுஞ்சாலை பணிகள், கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களிலும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள், சுற்றுலா தலங்களில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களிலும் பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் வேலை செய்து வருகின்றனர்.
லட்சக்கணக்கான இந்த தொழிலாளர்கள், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல மற்றும் தங்களது சொந்த மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க விரும்பினால், தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் மாநிலத்தில் இருந்து சொந்த மாநிலத்துக்கு பல நூறு அல்லது சில ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதற்காக இவர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு சென்ற வர, குறைந்தபட்சம் நான்கு முதல் ஒரு வாரம் விடுமுறை தேவைப்படுகிறது. அத்துடன் குறிப்பிட்ட நாட்களில் ரயிலில் பயண டிக்கெட் கிடைப்பது போன்ற நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் மேலாக தேர்தலுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் ஒருநாள் மட்டுமே விடுமுறை அளிப்பதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
இவர்களை கருத்தி்ல் கொண்டு, புலன்பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்தே தங்களது சொந்த தொகுதியில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தி தர இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் தேர்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களும் எளிய முறையில் வாக்களிக்க வகை செய்யும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சட்ட ரீதியாகவும், நிர்வாக மற்றும் தொழில்நுட்பரீதியாகவும் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து கலந்து ஆலோசிக்க வருமாறு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை விரைவில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் வசி்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இங்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற அடிப்படை ஆவணங்கள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே வாக்களிக்க வசதி ஏற்படுத்தி தரப்படுவதாகவும், இதன் பயனாக வடமாநில தொழிலாளர்களில் பெரும்பாலானோரின் ஆதரவு பாஜகவுக்கு இருப்பதால், அவர்களின் வாக்குகளை பெற்று தமிழ்நாட்டில் வேரூன்ற பாஜக முயற்சித்து வருவதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் எளிதாக வாக்களிக்க பிரத்யேக வசதியை கொண்டுவர தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.