வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 1,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்று முதல்வர்
தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. இதனுடன் கரும்பு வழங்க வேண்டும் என்ற சர்ச்சை வெடித்து விஷயம் நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் ஒருவழியாக பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்த்து கொள்ளப்பட்டது.
பொங்கல் பரிசில் தேங்காய்
அடுத்ததாக பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் சேர்த்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வெடித்துள்ளது. முன்னதாக ஈரோட்டில் பாஜக விவசாய அணி சார்பில் மாநில நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
இதை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் நாகராஜ், விவசாயிகளிடம் இருந்து பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாஜக விவசாய அணி தான் முதலில் போராட்டம் நடத்தியது.
தோட்டத்திற்கு ’நோ’
தற்போது கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளனர். ஒரு கரும்பை 35 ரூபாய் என்ற விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு செய்தது போல் திமுகவினரின் தோட்டத்தில் இருந்து மட்டும் வாங்க கூடாது. மேலும் தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை.
எனவே தேங்காயை கொள்முதல் செய்து பொங்கல் தொகுப்புடன் அரசு வழங்க வேண்டும். இல்லையெனில் வரும் ஜனவரி 2 அல்லது 3ஆம் தேதி மக்களுக்கு இலவசமாக தேங்காய் வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
ஐந்து முக்கிய கோரிக்கைகள்
தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சை நெற்களஞ்சியமாக விளங்குகிறது. இங்கிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். பஞ்சாபில் இருந்து கொள்முதல் செய்ய அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இது கமிஷன் ஆதாயத்துக்காக இருக்கலாம்.பரந்தூர் விமான நிலையத்திற்காக விவசாயிகளின் நிலத்தை அரசு எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதற்காக பாஜக பெரிய போராட்டத்தை நடத்தியது. ஆனால் வளர்ச்சி பணிகளுக்கு நாங்கள் எதிரி அல்ல. விவசாயிகள் பாதிக்கப்பட்ட கூடாது. ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கர் எடுத்தால் அவருக்கு இரண்டு ஏக்கர் விவசாயம் செய்ய நிலம் வழங்கப்பட வேண்டும்.அத்திக்கடவு அவிநாசி திட்டம் 99 சதவீதம் முடிந்துள்ளது. இந்த திட்டம் விரைவில் முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அமைச்சர் முத்துசாமி ஜனவரி 15ஆம் தேதி முடியும் என்றார். ஜனவரி 15ல் திட்டம் தொடங்காவிடில் பாஜக போராட்டம் நடத்தும்.மத்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தில் தனது பங்கை குறைக்கவில்லை. ஆனால் மாநிலத்தில் தான் பயிர் காப்பீடு திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வருகிறது. அதனால் தான் சிறு தானிய உற்பத்தி 45 சதவீதம் உயர்ந்துள்ளது.பவானிசாகர் பிரதான கால்வாயில் நடப்பாண்டு நான்கு முறை உடைப்பு ஏற்பட்டுள்ளது. நீர்வளத்துறை முறையாக கால்வாயை பராமரிக்காதது தான் காரணம். இதுதொடர்பாக பாஜகவின் ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று நாகராஜ் தெரிவித்தார்.