போடி: போடி – தேனி இடையே புதிய அகல ரயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி இறுதிக்கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
மதுரை – போடி இடையே 90 கி.மீ தொலைவிலான அகலப் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்து சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேனி – போடி இடையேயான 15 கி.மீ பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து ரயில் இஞ்சினை அதிவேகத்தில் இயக்கி இரண்டு முறை சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இன்று இந்த ரயில் பாதையில் பெங்களூரு தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இறுதிக் கட்ட ஆய்வு நடத்தினார் . இதற்காக இன்று காலை 10 மணிக்கு தேனி ரயில் நிலையத்தில் உள்ள பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட், கணினித் திரை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்பு போடி வரை டிராலியில் சென்று வாழையாற்று பாலம், கொட்டகுடி ஆற்றுப் பாலங்கள், பூதிப்புரம் சப்வே, நீர்வழி பாலங்கள், புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து போடியில் ரயில்வே இஞ்சினுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேனிக்கு மூன்று ரயில் பெட்டிகளுடன் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மாலை 3.27-க்கு கிளம்பிய ரயில் 120 கி.மீ. வேகத்தில் தேனிக்கு 3.36 மணிக்கு 9 நிமிடங்களில் சென்றடைந்தது. இந்த ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் ஆனந்த், முதன்மைப் பொறியாளர் மஸ்தான் ராவ், முதன்மை கட்டுமான பொறியாளர் இளம்பூரணன், முதன்மை தொடர்பு பொறியாளர் பாஸ்கர்ராவ், முதன்மை மின்பொறியாளர் பாலாஜி, துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போடிக்கு கடந்த 2010-ம் ஆண்டு மீட்டர்கேஜ் ரயில் நிறுத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அகல ரயில்பாதை பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலையும் சோதனை ஓட்டத்தையும் பார்த்து மகிழ்ந்தனர்.