மதுரை: மதுரை விமான நிலை சம்பவம் தொடர்பாக நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன் மற்றும் பாஜக வழக்கறிஞர்கள் மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று அளித்த புகாரில், “திரைப்பட நடிகர் சித்தார்த், அவரது குடும்பத்தினர் சென்னை செல்வதற்காக 28.12.2022-ல் மதுரை விமான நிலையம் வந்து்ள்ளனர். அப்போது தங்களிடம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசுமாறு கடுமையாக நடந்து கொண்டதாகவும், தேவையில்லாமல் காத்திருக்க வைத்ததாகவும் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு மொழி பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த்தின் குற்றச்சாட்டை மதுரை விமான பாதுகாப்பு படை அதிகாரிகள் மறுத்துள்ளனர். விமான நிலையத்தில் சித்தார்த், அவரது குடும்பத்தினரை தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை பெண் வீரர் தான் சோதனையிட்டுள்ளார். சித்தார்த் குடும்பத்தினர் உடமைகளை சோதனையிட ஒத்துழைப்பு அளிக்காதததால் சோதனை 10 நிமிடம் நீடித்தது என விமான நிலைய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்தில் நடந்த அனைத்து உண்மைகளையும் மறைத்து, தமிழக மக்களிடம் மொழி உணர்வை தூண்டி, பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் நடிகர் சித்தார்த்தும், அவரது குடும்பத்தினரும் செயல்பட்டுள்ளனர். எனவே, மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் சமூக வலை தளங்களில் விஷம கருத்துக்களை பரப்பி வரும் நடிகர் சித்தார்த், அவரது குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் விஜய்குமார் சிங்கிற்கு தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர்பாண்டி அனுப்பியுள்ள புகார் மனுவில், ”மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களை இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாக நடிகர் சித்தார்த் உள்நோக்கத்துடன் சமூக வலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் சுய விளம்பரத்துக்காக இதை செய்துள்ளார். இதனால் நடிகர் சித்தார்த், அவரது குடும்பத்தினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினரை இந்திய விமான நிலையங்களில் அனுமதிக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.