மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மோடியின் தாயார் எப்படி இருக்கிறார்?: விரைவில் குணமடைய பிரார்த்தனை

அகமதாபாத்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக் குறைவால் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த பிரதமர் மோடி, அகமதாபாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார்.

தற்போது ஹீராபெனின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பிரதமர் மோடியின் தாயின் உடல்நிலை குறித்து விசாரித்தார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 27ம் தேதி பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, சாலை விபத்தில் சிக்கினார். இந்த சம்பவத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் காயமடைந்தனர். மோடியின் குடும்பத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்களால், குஜராத்தில்
பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், கடந்த ஜூன் மாதம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவரது பாதங்களை கழுவி, அவரிடம் மோடி ஆசி பெற்றார்.

அதன்பின் குஜராத் சட்டமன்றத் தேர்தல் காலகட்டத்தில், வாக்களிப்பதற்கு முன்பு தனது தாயாரை சந்தித்து ஆசிபெற்றார். தற்போது ஹீராபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று மோடியின் ஆதரவாளர்களும், பாஜகவினரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.