நடிகர் அஜித்தைவிட விஜய் தான் நம்பர் 1 என்றுக் கூறி நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வரவுள்ளநிலையில், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளிவரவுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நட்சத்திரங்களின் படங்களும் நேருக்குநேர் மோதவுள்ளது ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித்தை விட விஜய்தான் நம்பர் 1 என்றும், அதனால் ‘வாரிசு’ படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று ‘துணிவு’ படத்தின் விநியோகஸ்தரும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனருமான உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று கேட்கப்போகிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தனது கருத்து குறித்து மீண்டும் தில் ராஜூ ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “தமிழகத்தில் விஜய், அஜித்தின் படங்களுக்கு சம அளவில் திரையரங்கு காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், என் ஹீரோதான் (விஜய்) பெரிய ஸ்டார். அதனால்தான், ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குக் காட்சிகள் கேட்கப் போகிறேன் என்றேன்.
பெரிய நட்சத்திரம் யார் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்?, ஒரு நடிகரின் நட்சத்திரப் பலத்தை திரையரங்கு வருமானம்தான் தீர்மானிக்கிறது. அப்படிப் பார்த்தால் விஜய்யின் கடைசி 5-6 படங்கள், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துள்ளன. படம் ஹிட்டா, தோல்வியா என்பது வேறு விவாதம். ஆனால், விஜய்யின் படங்களுக்கு சீரான அளவில் வசூல் கிடைக்கிறது. அதனால்தான் மற்றவர்களை விட அவர் பெரிய ஸ்டார் என்று சொல்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Last 5-6 movies of #ThalapathyVijay
collected a huge theatrical revenue irrespective of movie’s resultHence I’m telling he is bigger than anyone else right now and currently he is NO.1 #VarisuPongal #Varisu #VarisuAudioLanch #Thalapathy67pic.twitter.com/jEhXFeUuvn
— OTVF™ (@otvfofficial) December 28, 2022