தேனி: வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்விக பாசன பகுதிகளுக்காக விநாடிக்கு 2500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 64 அடியாக உள்ளது. இங்கிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 69 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்விக மூன்றாம் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அணையில் இருந்து இப்பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, வியாழக்கிழமை காலை வைகை அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் ஆற்றுப்படுகை வழியாக திறக்கப்பட்டது.மொத்தம் 1,533 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
தற்போது அணைநீர்மட்டம் 64.27அடியாகவும் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரத்து 29 அடியாகவும், நீர்வெளியேற்றம் 2 ஆயிரத்து 569 அடியாகவும் உள்ளது. அணையின் நீர்பிடிப்புப்பகுதிகளில் பருவமழை போதுமானஅளவு பெய்யாததால் நீர்மட்டம் சரிந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கூடுதல் நீர்திறப்பினால் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.