அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் மரணம்: காந்தி நகர் மயானத்தில் இறுதி சடங்கு; உலக தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத்: அகமதாபாத் மருத்துவமனையில் சுவாச பிரச்னையால் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் (100), குஜராத் மாநிலம் காந்தி நகர் ரேசானில் பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் அவருக்கு திடீரென சுவாச பிரச்னை ஏற்பட்டதால், அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தகவலறிந்த பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து மருத்துவமனைக்கு வந்து, தாயின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஹீராபென் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு, கடவுளின் காலடியில் சேர்ந்தது. துறவியின் பயணமும், தன்னலமற்ற கர்மயோகியின் அடையாளமும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கிய அந்த மும்மூர்த்தியை தாயிடம் உணர்ந்திருக்கிறேன்.

அவரது 100வது பிறந்த நாளில் அவரை நான் சந்தித்து வாழ்த்து பெற்ற போது, ‘ஞானத்துடன் பணியாற்றுங்கள்; தூய்மையான வாழ்க்கையை வாழுங்கள்’ என்று என்னிடம் கூறினார்’ என்று பதிவிட்டார். மேலும் விளக்கு ஒளியை கையில் வைத்திருக்கும் தனது தாயின் புகைப்படத்தையும் அந்தப் பதிவில் பகிர்ந்தார். தொடர்ந்து டெல்லியில் இருந்து புறப்பட்டு அகமதாபாத்திற்கு காலை 7.50 மணிக்கு வந்து சேர்ந்தார். அதற்குள் ஹீராபென்னின் உடல் காந்திநகருக்கு கொண்டு வரப்பட்டது. நேராக தனது தாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காலை 8.10 மணிக்கு பிரதமர் மோடி காந்தி நகர் வீட்டிற்கு வந்தார். அப்போது தனது தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதன்பின் 8.25 மணி வாக்கில் காந்தி நகர் வீட்டில் இருந்து, தனது தாயின் உடலை தனது சகோதரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி சுமந்து சென்றார். இறுதிச் சடங்கு ஆம்புலன்சில் ஹீராபென்னின் உடல் வைக்கப்பட்ட நிலையில், அந்த வாகனத்தில் மோடியும் ஏறி அமர்ந்து கொண்டார். தொடர்ந்து காந்திநகரின் செக்டர் 30ல் உள்ள மயானத்தில் எளிய முறையில் இறுதிச் சடங்குகள் நடந்தன. அந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். குடும்ப வழக்க முறைப்படி, காலை 9.40 மணிக்கு ஹீராபென்னின் உடலுக்கு அவரது மூத்த மகன் சோம்பாய், பிரதமர் மோடி உள்ளிட்ட சகோதரர்கள் அடுத்தடுத்து தீ மூட்டினார்.

அப்போது பிரதமர் மோடி இறுக்கமான முகத்துடன் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தாயின் இறுதி சடங்கை முடித்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் பிரதமர் மோடி டெல்லி திரும்பி தனது வழக்கமாக அலுவலக பணிகளை மேற்கொண்டார். வீடியோ கான்பரன்சிங் மூலம் மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த அவர், ரூ.5,800 கோடி மதிப்பில் நிறைவுற்ற பல்வேறு ரயில் திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து, 5 மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய கங்கை கவுன்சில் கூட்டத்திலும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்றார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, தங்கள் அன்புத்தாயார் ஹீராபென்னுடன் தாங்கள் கொண்டிருந்த உணவுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன். துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* குடும்பத்தினர் வலியுறுத்தல்
ஹீராபென் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் மோடியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டியில், ‘‘கடினமான நேரத்தில் எங்களுக்காக பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.  அவரவர் தாங்கள் திட்டமிட்டபடி தங்களது பணியை செய்யுங்கள். அதுவே எங்கள் தாயாருக்கு செலுத்தும் மரியாதையாகும்’’ என தெரிவித்துள்ளனர்.

* தாயின் எளிய வாழ்க்கை பற்றி உணர்வுப்பூர்வ பதிவு
தாய் ஹீராபென்னின் 100வது பிறந்தநாளையொட்டி, பிரமதர் மோடி அவரது வலைப்பதிவில் வெளியிட்டிருந்த உணர்வுப்பூர்வ பதிவில் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர், ‘தாய் என்பவள் குழந்தையை பெற்றெடுப்பவள் மட்டுமல்ல, அந்த குழந்தையின் தியாகங்கள், புத்தி, ஆளுமை மற்றும் தன்னம்பிக்கையை வடிவமைப்பவளும் தாய்தான். முறைப்படி கல்வி கற்காமல் எதையும் கற்க முடியும் என்ற வாழ்க்கைப் பாடத்தை என் தாய் எனக்கு சொல்லிக் கொடுத்தார். எனது தாய் மிகவும் எளிமையானவர். ஆனால் அசாதாரணமானவர். எனது சிறு வயதில் குடும்ப கஷ்டத்திலும் உறுதியாக இருந்தவர் என் தாய். குடும்பத்தை காப்பாற்ற பிறர் வீடுகளில் பாத்திரம் கழுவினார். ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா துன்பங்களை வெற்றிகரமாக சமாளித்தார்.

2001ல் குஜராத் முதல்வராக பதவியேற்கும் முன்பாக அவரிடம் சென்ற போது, லஞ்சம் வாங்கக் கூடாது என அறிவுறுத்தினார். சுத்தமாக இருக்க வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த எனது தாய், துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவோர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். வாட்நகரில் எங்கள் வீட்டை ஒட்டியிருக்கும் வாய்க்காலைச் சுத்தம் செய்ய யாராவது வரும்போதெல்லாம், அவர்களுக்கு டீ கொடுக்காமல் என் தாய் விடமாட்டார். மிகவும் பெரிய இதயம் கொண்டவர். என் அம்மாவையும் அவரைப் போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பார்க்கும் போதெல்லாம், இந்தியப் பெண்களால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்று நான் உணர்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.

* கடைசி சந்திப்பு
கடந்த 1923 ஜூன் 18ம் தேதி மெஹ்சானாவில் பிறந்த ஹீராபென், தேநீர் விற்பனை செய்து வந்த தாமோதர்தாஸ் முல்சந்த் மோடியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் அம்ரித் மோடி, பங்கஜ் மோடி, நரேந்திர மோடி, பிரகலாத் மோடி, சோமா மோடி ஆகிய ஐந்து மகன்களும், வசந்திபென் ஹஸ்முக்லால் மோடி என்ற மகளும் உள்ளனர். ஹீராபென் கடந்த ஜூன் மாதம் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார். பிரதமராக பதவியேற்று டெல்லி சென்ற பிறகு பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை குஜராத் செல்லும் போது சொந்த ஊருக்கு சென்று தாயை சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில், கடைசியாக பிரதமர் மோடி கடந்த 4ம் தேதி குஜராத் தேர்தல் பிரசாரத்திற்காக காந்தி நகர் சென்ற போது அவர் தனது தாயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உலக தலைவர்கள் இரங்கல்
*பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஜப்பான் பிரதமர் கிஷிடோ, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.