அருமனை: குமரி மாவட்டம் சிற்றார் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (55). இவரது மனைவி ஞானவதி (50). அரசு ரப்பர் கழகம் சிற்றார் கோட்டம் கூப் எண் 42 ல் ரப்பர் பால் வெட்டும் வேலை பார்த்து வந்தனர். நேற்று காலை கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். திடீரென யானை ஒன்று ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்து வேகமாக வந்தது. அதிகாலையில் இருட்டாக இருந்ததால் அருகில் வந்த பின்னரே யானையை கவனித்தனர். சுதாரித்து ஓடுவதற்குள் தும்பிக்கையால் ஞானவதியை வேகமாக தாக்கி சுழற்றி வீசியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். அருகில் நின்றவர்கள் கூச்சலிட்டு யானையை துரத்தினர். இதையடுத்து யானை காட்டுக்குள் சென்றது. மனைவி உடலை பார்த்து மோகன்தாஸ் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. ஞானவதியின் உடலை எடுக்க விடாமல் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இழப்பீடுக்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள உறுதி அளித்தபின் போராட்டம் கைவிடப்பட்டது.
யானையை விரட்ட கும்கி: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அக்கூர் ஜோரை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கருப்பன் யானை, தினமும் கிராமங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, இரவு நேரங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதையடுத்து கருப்பன் யானையை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சியில் இருந்து கபில்தேவ் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.