திருச்சி: திருச்சியில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள 10 மாத பெண் குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் மருத்துவ செலவுக்கு உதவ கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33). இவரது மனைவி ருத்ரபிரியா (22). கடந்த 3 மாதத்திற்கு முன்பு எலக்ட்ரிசியன் பணிக்காக தினேஷ்குமார் சிங்கப்பூர் சென்று விட்டார். இவர்களுக்கு இனியா (2) மற்றும் தன்ஷி (10 மாதம்) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் பிறந்த தன்ஷி, செப்டம்பர் மாதம் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தாய் ருத்ரபிரியா கூறுகையில், மருத்துவரின் ஆலோசனையை தொடர்ந்து, பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றோம். ரத்த பரிசோதனைக்கு ரூ.20 ஆயிரம் செலவானது. குழந்தை சுவாசிக்க ரூ. 53 ஆயிரம் மதிப்பில் இயந்திரம் ஒன்று வழங்கினர். அதன்மூலம் தூங்க வைக்கிறோம். ஒருமுறை குழந்தையை பெங்களுரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றால் 1 லட்சம் செலவாகிறது. தினமும் 10 நிமிட பிசியோதெரபிக்கு 500 ரூபாய் என்று செலவாகிறது.
இந்த நோயை குணப்படுத்த ரூ.18 கோடி மதிப்புள்ள ஊசி போட வேண்டுமாம். அடுத்தது குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்நாள் முழுவதும் மருந்து கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். 100மில்லி மருந்து விலை ரூ. 6 லட்சம். இதை தொடங்குவதற்கு முன்பு 2 அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டுமாம். ஊசி போட்டாலும், 8 மாதம் வரை குழந்தைக்கு மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்படுமாம். அதற்கு தனியாக ரூ.20 லட்சம் செலவாகும். தமிழகத்தில் இந்த நோய்க்கான மருந்துகள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். பெங்களூர் செல்ல பணமில்லாததால் தான் வீட்டில் இருந்து குழந்தையை பராமரித்து வருகிறேன். திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர் ஸ்ரீராம் தந்த அறிக்கையுடன் சேர்த்து மனு ஒன்றை எழுதி கொடுத்தேன். முதல்வர், என்னுடைய குழந்தையை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.