புதுடெல்லி: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிறுபான்மையினரை அந்நாட்டு அரசு பாதுகாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தயா பீல்(40) என்ற இந்து பெண் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு மிக கொடூரமாக சிதைக்கப்பட்டு இருந்தது. இந்த கொலையை ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை. இஸ்லாமாபாத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சிந்து மாகாண தலைவர்கள் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இது தொடர்பாக கூறுகையில், ‘‘பாகிஸ்தானில் இந்து பெண் கொலை குறித்த செய்திகளை பார்த்தோம். ஆனால் இந்த சம்பவம் தொடர்பான குறிப்பிட்ட விவரங்கள் எங்களிடம் இல்லை. ஆனால் பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினோம். சிறுபான்மையினரின் பாதுகாப்பு அவர்களின் நல்வாழ்வு ஆகியவை அந்நாட்டு அரசின் பொறுப்பாகும்’’ என்றார்.