சிவகங்கையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
திருச்சியில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் காணொளிக்காட்சி வாயிலாக, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வங்கிக்கடன் இணைப்பிற்கான ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்கள் பங்கேற்று கடன் உதவிகளை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் இவ்வாறு கூறினார்; வீட்டுக்குள் முடங்கி இருக்கும் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட வித்திட்டவர்கள் தந்தை பெரியாரும், அண்ணாவும் என்றார்.
அதற்கு செயல் வடிவம் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என கூறினார். திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்கி பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு 2006-11 காலகட்டத்தில் அப்போது ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோதே முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகள் மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார்.
முதல்வர் சென்ற ஆண்டு 20,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 21,600 கோடி ரூபாய் வழங்கப்பட்டதை சுட்டி காட்டிய அமைச்சர், முதல்வர் இந்த ஆண்டு 25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றார். மேலும், தமிழக வரலாற்றிலே இல்லாத அளவு இன்று தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2540 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 6846 குழுக்களுக்கு 84 கோடியே 13 லட்ச ரூபாய் கடனுதவி வழங்கபடுகிறது என்றார்.