பாரத பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை 3:30 மணியளவில் காலமானார். இதனை அடுத்து குஜராத் மாநிலத்திற்கு விரைந்த மோடி தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து ஹீராபென் இறுதிச் சடங்கு நடைபெற்றது. காந்தி நகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.
பாரத பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அகமதாபாத் சென்றுள்ளார்.
இந்த நிலையில் பாரத பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் சார்பில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைக்கப்பட்டது. இந்தப் அந்த பேனரில் “உலகம் போற்றும் உன்னத தலைவர் பாரத பிரதமரை ஈன்றெடுத்த அன்னை மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார் அன்னையின் ஆத்மா சாந்தியடைய ஆழ்ந்த இரங்கலுடன் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் தெற்கு மாவட்டம்” என அச்சிடப்பட்டிருந்தது.
இந்த பேனரின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவினர் கூட பேனர் வைக்காத நிலையில் திமுகவினர் பேனர் வைத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருள் ஆகியுள்ளது.