பெங்களூரு: ஒன்றியம், மாநிலத்தில் பாஜக அரசு இருந்தும் பலனில்லை; கன்னட மொழிக்காக ‘செய் அல்லது செத்துமடி’ நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடா, கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில், ‘கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் அடையாளத்தை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. கன்னட கட்சியை வலுப்படுத்த வேண்டும்.
தண்ணீருக்காகவும், மொழிக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும். இன்றைய காலக்கட்டமானது, கன்னட மொழி பேசும் மக்களுக்கு ‘செய் அல்லது செத்துமடி’ தருணமாக உள்ளது. ஒன்றியம் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பாஜக அரசுகள் இருந்தும், பெலகாவி எல்லைப் பிரச்னையைத் தீர்க்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி எவ்வளவு அலட்சியமாக உள்ளது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். நமது வரிகளில் நமக்கு பங்கு வேண்டும்.
நம்முடைய குழந்தைகளுக்கு வேலை வேண்டுமென்றால், வெளியாட்களிடமிருந்து நம்முடைய மொழியையும் கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டும். எல்லை பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால், கன்னட மொழி பேசுபவர்கள் தங்கள் அடையாளத்தை எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. நம்முடைய மக்களின் வலியை கன்னட மாநில கட்சிகளால் மட்டுமே புரிந்து கொண்டு செயல்பட முடியும்’ என்று கூறியுள்ளார்.