சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் குறிப்பிட்ட சில நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – நாகர்கோவில் உட்பட 5 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கமாகவும் அறிவிக்கப்பட்டன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12, 13 ஆகிய தேதிகளில் முறையே திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடத்தில் முடிந்தது. நேற்று பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, காத்திருப்போர் பட்டியலும் முடிந்து, ‘ரெக்ரெட்’ என்று காட்டியது. ரெக்ரெட் என்பது காத்திருப்போர் பட்டியலில்கூட இனி பதிவு செய்ய முடியாது.
இதுபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.13-ம் தேதி எர்ணாகுளத்துக்கு இயக்கப்படும் ரயிலில் கோயம்புத்தூருக்கு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்றது.
நாகர்கோவில், திருநெல்வேலியில் இருந்து ஜன.16, 17-ம் தேதிகளில் தாம்பரத்துக்கு இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் காண்பித்தது.
வழக்கமாக முக்கிய பண்டிகைகளுக்கு ஒருநாள் முன்பாக, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவது வழக்கம். அதேபோல் பொங்கல் பண்டிகைக்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.