சேலம்: சீனாவில் இருந்து சேலத்துக்கு கரோனா தொற்றுடன் வந்த ஜவுளி வியாபாரி ஒருவர், உழவர் சந்தைக்கு சென்று வந்ததால், அந்த உழவர் சந்தையில் காய்கறி விற்பனைக்கு வந்த விவசாயிகள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி தனது குடும்பத்துடன் சீனாவில் தங்கியிருந்தார். சீனாவில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், அவர் கடந்த 27-ம் தேதி தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் தனது கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவு வெளிவந்தபோது, ஜவுளி வியாபாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜவுளி வியாபாரி அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். அவரது வீடு அமைந்துள்ள வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஜவுளி வியாபாரிக்கு ஏற்பட்டுள்ள தொற்று, புதிய வகை கரோனா தொற்றா என்பது குறித்து சளி மாதிரி ஆய்வுக்கு அனுப்பட்டுள்ளது.
இதனிடையே, கரோனா பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்பாக, இளம்பிள்ளை உழவர் சந்தைக்கு சென்ற ஜவுளி வியாபாரி, அங்கிருந்து காய்கறிகள் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரத் துறையினர், இளம்பிள்ளை உழவர் சந்தையில் காய்கறி விற்பனையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை நடத்தினர்.
மேலும், அவர்களுக்கு சத்து மாத்திரைகள் கொடுத்து, கரோனா தொற்று அறிகுறிகள், தொற்றுப் பரவாமல் தடுப்பது ஆகியவை குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், உழவர் சந்தை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.