சென்னை: தனியார் பள்ளிகளுக்கு இணையம் வழியே அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய வலைதளம் மற்றும் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து அலுவல் பணிகளையும் ஒருங்கிணைத்து கணினிமயமாக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர், ஆசிரியர் வருகைப்பதிவு தொடங்கி அனைத்து ஆவணங்களும் ‘எமிஸ்’ உள்ளிட்ட வலைதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
பல்வேறு சேவைகள்: இதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல் உட்பட அரசின் பல்வேறு சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான பிரத்யேக செயலிமற்றும் வலைதளம், பள்ளிக்கல்வித் துறை சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மற்றும் வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் துறை செயலர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிக்கல்வித் துறை சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான https://tnschools.gov.in/dms/?lang=en எனும் வலைதளத்தில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த வலைதளம் மற்றும் செயலி மூலம் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி, அங்கீகாரம், கூடுதல் வகுப்புகள், மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி, பள்ளி பெயர், இடம் மற்றும் நிர்வாக மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொள்ள வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
15 ஆயிரம் பள்ளிகள் பயன்பெறும்: அத்துடன், தங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் பள்ளி நிர்வாகங்களால் தெரிந்துகொள்ள முடியும். இதனால் தனியார் பள்ளிகள் அரசின் அனுமதியை எளிய முறையில் வெளிப்படையாகவும், காலதாமதமின்றி விரைவாகவும் பெற முடியும். புதிய செயலியால் சுமார் 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் பயன்பெற உள்ளன.
மேலும், தனியார் பள்ளிகளுக்கும், கல்வித் துறைக்கும் இடையேயான தொடர்பும் மேம்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.