'தேச பாதுகாப்பை விட்டு தர மாட்டோம்! – ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்

“அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்காக தேச பாதுகாப்பை ஒருபோதும் விட்டுத் தர மாட்டோம்,” என, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், சிவகிரி மடத்தின் 90-வது ஆண்டு புனிதப் பயண நிகழ்ச்சியில், பாஜக மூத்தத் தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அவர் பேசியதாவது:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ”நமது நண்பர்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது” என்று கூறினார். எனவே அண்டை நாடுகளுடன் நமக்கு நல்லுறவு நட்புறவு இருப்பது அவசியம். அதே சமயத்தில் அந்த நட்புறவுக்காக தேச பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். தேச பாதுகாப்பை விட்டுக் கொடுத்து எந்த நாட்டுடனும் நல்லுறவு தேவையில்லை.

‘தொழில்கள் மூலம் வளமை’ என்று ஸ்ரீநாராயண குரு போதித்தார். நமது ‘தற்சார்பு இந்தியா’ கொள்கைக்கு அதுவே அடிப்படை. அதனால் தான் பொருளாதாரத்தில் உலகின் ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் உடல் என்னும் எல்லையை ராணுவத்தின் உதவியுடன் பாதுகாக்க நான் பணியாற்றுவது போல் இந்த மடத்தின் துறவிகள் நாட்டின் ஆன்மாவை பாதுகாக்க பணியாற்றி வருகிறார்கள். உங்கள் பணியை பாராட்டுகிறேன். உடலும் ஆன்மாவும் பாதுகாப்பாக இருந்தால் தான் ஒரு நாடு உயிர் வாழ முடியும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை இந்திய பாரம்பரியத்தில் இல்லை என்றும் அவை பிரெஞ்சு புரட்சியில் இருந்து வந்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். அது சரியல்ல. அவையெல்லாம் இந்திய கலாசாரத்தில் இருப்பவை. நமது பழங்கால நூல்களிலும் துறவிகள், தத்துவ ஞானிகளின் போதனைகளிலும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ஒருபடி மேலே போய் உலக சமத்துவம் பற்றி பேசினர்.

‘உலகமே ஒரு குடும்பம்’ என்பதை வலியுறுத்தினர். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவை கேட்டதும் நான் டெல்லி திரும்ப நினைத்தேன். ஆனால் அரசு கடமைகளை முடித்து விட்டு வருமாறு ஒவ்வொருவருக்கும் பிரதமர் சொல்லி விட்டார். ஆகவே அனைவரின் சார்பில் பிரதமரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.