புதுடெல்லி: 2021-22ம் ஆண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் பாஜ கட்சி ரூ.351 கோடி நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது. 2021-22 நிதியாண்டில் தேர்தல் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த அறிக்கையை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ளது. அதன்படி 89 கார்ப்பரேட், வணிக நிறுவனங்கள், 40 தனிநபர்கள் மொத்தமாக ரூ.487.0551 கோடியை ஆறு தேர்தல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். இந்த நிதி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. பாஜவுக்கு மட்டும் ரூ.351.50 கோடி (72.17 சதவீதம்) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து, கே.சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ரூ.40 கோடி பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்களில், சமாஜ்வாடி ரூ.27 கோடி, ஆம் ஆத்மி ரூ.21.12 கோடி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ரூ.20 கோடியும் பெற்றுள்ளன. இந்தக் கட்சிகள் பெற்ற நன்கொடையைவிடவும் குறைவாக காங்கிரஸ் ரூ.18.44 கோடியை பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலி தளம் ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரஸ் ரூ.1 கோடி, கோவா பார்வர்டு கட்சி, திமுக தலா ரூ.50 லட்சங்களை நன்கொடையாகப் பெற்றுள்ளன.