புதுடெல்லி: தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் காங்கிரசை காட்டிலும் பாஜக 19 மடங்கு வசூல் (ரூ.487.09 கோடி) செய்து தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய, மாநில அரசியல் கட்சிகள் எவ்வளவு நன்கொடைகளைப் பெறுகின்றன? எங்கிருந்து, யார், எவ்வளவு கொடுக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு நேரடியான அல்லது வெளிப்படையான பதில்கள் இல்லை. தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் எவ்வளவு என்பது குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, ‘கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து அரசியல் கட்சிகள் தரப்பில் தேர்தல் நன்கொடைகளாக கடந்த 2021 – 2022ம் நிதியாண்டில் மொத்தம் ரூ. 487.09 கோடி பெற்றுள்ளன. அவற்றில் ஆளும் பாஜகவுக்கு ரூ.351.50 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. அதாவது அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையில் 72.17 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக காங்கிரஸ் ரூ.18.44 கோடியும், டிஆர்எஸ் ரூ.40 கோடியும், சமாஜ்வாதி ரூ.27 கோடியும், ஆம் ஆத்மி ரூ.21.12 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.20 கோடியும் பெற்றுள்ளன.
மேலும் ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) ரூ.7 கோடியும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி ரூ.1 கோடியும், கோவா ஃபார்வர்டு கட்சி ரூ.50 லட்சமும் பெற்றுள்ளன. தேசிய கட்சியான காங்கிரஸை காட்டிலும் பத்தொன்பது மடங்கு நன்கொடைகளை பாஜக பெற்றுள்ளது. பாஜகவுக்கு கிடைத்த மொத்த நன்கொடைகளில் மற்ற ஒன்பது கட்சிகளுக்கு கிடைத்த தொகையை காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.