கடலூர்: கடலூரில் நேற்று நடந்த விழாவில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழில் மேம்பாட்டுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 5,600 ஏக்கரில் பன்னீர் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசு தொகுப்பில் பன்னீர் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொங்கல் பரிசு அறிவித்த நிலையில், தற்போது மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப 2 கோடியே 16 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட உள்ளது. பன்னீர் கரும்பு அரசு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார். பன்னீர் கரும்புகள் எந்தெந்த பகுதியில் கொள்முதல் செய்யப்படும் என்பதை கூட்டுறவுத் துறை, வேளாண் துறை முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.