கராச்சி,
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 438 ரன்கள் சேர்த்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 440 ரன்கள் எடுத்திருந்தது. கேன் வில்லியம்சன் (105 ரன்), சோதி (1 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று நியூசிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மேலோங்கியது. வில்லியம்சன்- சோதி இணையை பாகிஸ்தான் பவுலர்களால் மதிய உணவு இடைவேளை வரை ஒன்றும் செய்ய முடியவில்லை. மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் இருவரும் பொறுமையாக செயல்பட்டு ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினர். ஸ்கோர் 595-ஐ எட்டிய போது உடைந்தது. சோதி 65 ரன்களில் (180 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார்.
தொடர்ந்து கேப்டன் டிம் சவுதி, நீல் வாக்னெர் டக்-அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினர். மறுமுனையில் நிலை கொண்டு விளையாடிய வில்லியம்சன் தனது 5-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார்.
.அவர் இரட்டை சதத்தை தொட்டதும் நியூசிலாந்து இன்னிங்சை முடித்துக் கொண்டது. இதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 194.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 612 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வில்லியம்சன் 200 ரன்களுடனும் (395 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஜாஸ் பட்டேல் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அப்ரார் அகமது 5 விக்கெட்டும், நமன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 174 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக் (17 ரன்), ஷான் மசூத் (10 ரன்) இருவரின் விக்கெட்டையும் சுழற்பந்தில் பறிகொடுத்தது. ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. இமாம் உல்-ஹக் (45 ரன்), நமன் அலி (4 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்
5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று நடந்தது . நமன் அலி தொடக்கத்தில் 4ரன்களில் வெளியேறினார்.அடுத்து வந்த பாபர் அசாம் 14 ரன்களில் வெளியேறினார்.பின்னர் சர்ப்ராஸ் அகமது அரைசதம் அடித்து 53 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்நது சவுத் ஷகீல் அரைசதம் அடித்து 55 ரன்களில் வெளியேறினார். பின்னர் முகமது வாசிம் 43 ரன்களில் வெளியேறினார் .இறுதியில் பாகிஸ்தான் அணி 3=8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்ட்டது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 5வது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது .இதனால் போட்டி ‘டிரா’ ஆனது