புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மொத்தம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் நாடாளுமன்றத்துக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வளாகத்தில் பிரதமர் இல்லம், துணை ஜனாதிபதி இல்லம், ஒன்றிய செயலகம் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன. கடந்த மாதம் ஒன்றிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேட்டியளிக்கையில், ‘‘நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன’’ என்று கூறினார்.
இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் வழக்கமாக இரண்டு பாகங்களாக நடைபெறும். அதில் முதல் பாகம் ஜனவரி 30 அல்லது 31ம் தேதி துவங்குகிறது. பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். பட்ஜெட் இரண்டாவது கூட்டம் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் வரை நடைபெறும். இதுகுறித்து வட்டாரங்கள் கூறுகையில்,‘‘பட்ஜெட் இரண்டாவது கூட்ட தொடர் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் நடைபெறும்’’ என்று தெரிவித்தன.