புத்தாண்டு: ஏற்காடு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

சேலம்: புத்தாண்டுக்கு ஏற்காடு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காடு வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், கரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மதுபாட்டில்களை கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை சோதனைச் சாவடிகளில் காவல் துறை கண்காணிப்பு மேற்கொள்கிறது.

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலம், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள், வட மாநிலங்களிலும் சுற்றுலாப் பயணிகளிடம் பிரசித்தி பெற்றது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, புதிய வகை கரோனா தொற்றுப் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதாலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் அசம்பாவிதம் ஏதுமின்றி நடைபெறவும் சேலம் மாவட்ட ஊரக உட்கோட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிஎஸ்பி. தையல்நாயகி கூறியதாவது: ”ஏற்காடு வரும் சுற்றுலா வாகனங்கள், ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடியில் தணிக்கை செய்யப்படும். அதில், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், கரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுவர்.

கார்கள் அனைத்தும் சோதிக்கப்பட்டு, மதுபாட்டில்கள் இருந்தால், அவை பறிமுதல் செய்யப்படும். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகளின் நிர்வாகங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது அருந்திவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகளை விடுதிகளில் அனுமதிக்கக் கூடாது.

விடுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படால் இருக்க, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். புத்தாண்டு நிகழ்ச்சிகளை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குத் தொடங்கி, அரை மணி நேரத்துக்குள் நடத்தி முடித்திட வேண்டும். மது அருந்திவிட்டு எவரும் வாகனங்களை இயக்கக் கூடாது.

சட்டம் – ஒழுங்கை குலைக்கும் வகையில், பட்டாசு வெடிப்பது, கேலி கிண்டல் செய்வது கூடாது. நிகழ்ச்சியாளர்கள், நிகழ்ச்சிகளை கண்டிப்பாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் உள்ள பூங்காக்கள், காட்சி முனைப்பகுதிகள் உள்பட அனைத்து சுற்றுலா இடங்களிலும் போலீஸார் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.