மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

ஈரோடு: ஈரோடு நியூ டீச்சர்ஸ் காலனியில் வசித்தவர் டாக்டர் சக்திவேல் (39). அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூர்ணிமா. இவர் எம்பிபிஎஸ் முடித்து அகமதாபாத்தில் தங்கி நோயியல் நிபுணர் படிப்பு படித்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். பள்ளி விடுமுறைக்காக மதுரை அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு மகன் சென்றதால் டாக்டர் சக்திவேல் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்திருந்ததது. அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து பார்த்த போது டாக்டர் சக்திவேல் மயங்கிய நிலையில் இருந்தார்.

தகவலறிந்து உறவினர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில், டாக்டர் சக்திவேல் தனக்கு தானே அளவுக்கு அதிகமாக ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடிதம் சிக்கியது: வீட்டில் போலீசார் சோதனையிட்ட போது டாக்டர் சக்திவேல் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘எனது சாவுக்கு நானே காரணம். மனது சரியில்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என எழுதப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.