கீழக்கரை: கீழக்கரை அருகே களரி, மேலமடை, கற்காத்தி, வெண்குளம், கொடிக்குளம், வித்தனூர் கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் களரி கிராமத்தில் இருந்து உத்திரகோசமங்கை வழியாக தினமும் காலை 5, மாலை 6.30 மணி ஆகிய 2 வேளை மட்டும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.
இந்த அரசு பஸ்கள் மாணவ, மாணவிகளுக்கு பயனின்றி உள்ளது. எனவே களரி முதல் உத்திரகோசமங்கைக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் நேரத்தில் கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என அரசுக்கு மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து திருப்புல்லாணி வழியாக உத்திரகோசமங்கை வரை இயங்கி வந்த அரசு பஸ் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் தினமும் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு உத்திரகோசமங்கை அரசு பள்ளிக்கு 8.30 மணிக்கு போய் சேர்கின்றனர். அதேபோல் பள்ளியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு 6.30 மணிக்கு வீடு திரும்புகின்றனர். மாணவ, மாணவிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து களரி வழியாக உத்திரகோசமங்கைக்கு செல்ல பள்ளி நேரங்களில் கூடுதலாக அரசு பஸ் இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.