அமராவதி: வழக்குகளில் வாதாட வக்கீல்கள் கிடைக்காததால் நாடு முழுவதும் 63 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்,அமராவதியில் ஆந்திர பிரதேச நீதித்துறை அகாடமி துவக்க விழா நேற்று நடந்தது. இதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது,‘‘இந்திய கிரிமினல் நீதி அமைப்பின்படி வழக்குகளில் ஜெயில் தண்டனையை விட ஜாமீன் வழங்குவது முக்கியமானது. ஆனால் செயல்முறையில், இந்தியாவில் சிறைகளில் இருக்கும் விசாரணை கைதிகள் எண்ணிக்கை அதிகம். ஒருநாள் சிறை என்பது அதிகமாகும். தேசிய நீதித்துறை தரவுகளின்படி சில ஆவணங்கள் அல்லது சான்றிதழ் கிடைக்காததால் 14 லட்சம் வழக்குகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உரிய வக்கீல்கள் கிடைக்காததால் 63 லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. நீதிமன்றங்கள் தங்கள் முழுமையான பலத்துடன் செயல்படுவதற்கு வக்கீல்களின் ஒத்துழைப்பு தேவை. சில வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகளின் விமர்சனத்துக்கு ஆளாக வேண்டி உள்ளது. குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையின் அடிப்படையில் நீதிபதிகளின் செயல்பாடுகள் மதிப்பிடப்படுகிறது. இதுபோன்ற அணுகுமுறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்’’ என்றார்.