விமானத்தில் அண்ணாமலை சேட்டை… பீதியான 300 பயணிகள்.. இதுதான் நடந்ததா?

சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றி ட்வீட் போட்டிருந்தார். அது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ட்வீட்டில், கடந்த 10ஆம் தேதி ‘போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும் போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் ‘எமர்ஜென்சி’ கதவை திறந்து விளையாடியிருக்கிறார்கள்.

விதிமுறைகளின்படி பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கி மீண்டும் சோதனை செய்யப்பட்டு நோகடிக்கப்பட்டிருக்கிறார்கள்.விமானம் 3 மணி நேர தாமதம் ஆகியிருக்கிறது. மன்னிப்பு கடிதம் எழுதுவதே பரம்பரை வழக்கம் என்பதால், அன்றும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஊடகங்களில் இந்தச் செய்தி ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பியபடி அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.

வழக்கமாக செந்தில்பாலாஜி போடும் ட்வீட்டுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்து வருவார். ஆனால், இந்த ட்வீட்டுக்கு அண்ணாமலை எந்த விளக்கமும் இதுவரை தரவில்லை. மேலும், செந்தில்பாலாஜி போட்டிருந்த ட்வீட்டின் பின்னணியும் முழுமையாக செய்திகளில் வரவில்லை.

இதுகுறித்து அலசியபோது முன்னாள் ஆர்எஸ்எஸ்காரரும், சமூக செயற்பாட்டாளருமான சத்யபிரபு இச்சம்பவம் குறித்து பேசியிருப்பது தெரிய வந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டோஷாப்’ கட்சியின் மாநிலத் தலைவர் என்று அண்ணாமலையையும், இளைஞரணியின் தேசியத் தலைவர் என்று தேஜஸ்வி சூர்யாவையும் தான் குறிப்பிட்டுள்ளதாக சத்யபிரபு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இவ்வாறு கூறினார்; ”திருச்சியில் சில தினங்களுக்கு முன்பு மாநில செயற்குழு கூட்டம் ஒன்று நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா மற்றும் சில மாநில நிர்வாகிகள் விமானத்தில் பயணித்துள்ளனர். ஓடு தளத்தில் இருந்து விமானம் பறக்க தயாராகும்போது அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் எமெர்ஜென்சி கதவை திறந்து விளையாடியுள்ளார். உடனே விமானிகளுக்கு அவசர ஒலி அடித்துள்ளது.

பதறிப்போன விமானிகள் விமானத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று விசாரித்தபோது, அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும்தான் எமெர்ஜென்சி கதவை திறந்தது தெரிய வந்துள்ளது. இருவரையும் கடிந்துகொண்ட விமானிகள் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறக்கியுள்ளனர். விமான விதிகளின்படி அனைத்து பயணிகளையும் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, அண்ணாமலையும், தேஜஸ்வி சூர்யாவும் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். பின்னர் சுமார் 3 மணி நேரம் கழித்து விமானம் பயணிகளுடன் திருச்சி கிளம்பியுள்ளது. கொஞ்சம்கூட உயிர்களை பற்றி கவலை இல்லாமல் எமெர்ஜென்சி கதவை திறந்து மற்ற பயணிகளின் உயிர்களோடு இருவரும் விளையாடியுள்ளனர்” என்று சத்யபிரபு பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.