வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதிக்கு சிறப்பு பஸ்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்தில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், திருப்பதியில் நேற்று மாநில போக்குவரத்து கழக திருப்பதி பிராந்திய மேலாளர் செங்கல்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஜனவரி 1ம்  தேதி ஆங்கில புத்தாண்டு, 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசிக்கான சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் மலையில் பக்தர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. எனவே, வழக்கத்தைவிட அதிகளவிலான பக்தர்கள் வர வாய்ப்பு உள்ளது. திருப்பதி-திருமலை இடையே தற்போது தினமும் 1,100 ட்ரிப்புகள் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக வர இருக்கும் பக்தர்களின் வசதிக்காக 1,769 ட்ரிப்புகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 25 சிறப்பு பஸ்கள் திருமலைக்கு டிசம்பர் 31ம் தேதி (இன்று) இரவு முதல் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு தேவஸ்தானம் டிக்கெட்டுகளை வழங்கியுள்ளது. அந்த டிக்கெட்டுகளில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தரிசிக்கும் வகையில் மட்டுமே பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல அனுமதி அளிக்கப்படும். இதன் மூலம் டிசம்பர் 31ம் தேதி(இன்று)  இரவு முதல் 11ம் தேதி வரை ஏழுமலையானை தரிசிக்க ஏதாவது ஒரு டிக்கெட்டுடன் வரும் பக்தர்கள் மட்டுமே திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பஸ்களில் செல்ல அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

6 மாதம் தரிசனம் நிறுத்தமா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூலவர் சன்னதிக்கு மேலுள்ள ஆனந்த நிலையம் தங்க தகடுகள் புதுப்பிக்கும் பணிகளுக்காக சுவாமி தரிசனம் 6 மாதங்களுக்கு நிறுத்தப்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் தவறான செய்தி பரப்புவதாக கோயில் தலைமை அர்ச்சகர்களில் ஒருவரான  வேணுகோபால தீட்சிதர் நேற்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘ஏழுமலையான் கோயில் ஆனந்த நிலையத்திற்கு 6 மாதங்களுக்குள் தங்க தகடுகளை புதிதாக மாற்றி அமைக்கும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு   மார்ச் 1ம் தேதி பாலாலயம் செய்ய அர்ச்சகர்கள் தேதி நிர்ணயம் செய்துள்ளனர். ஆனாலும், பணிகள் நடைபெற்று வரும் 6 மாதத்தில் பக்தர்கள் வழக்கம் போல் மூலமூர்த்தியை சன்னதியில் தரிசிக்கலாம்’’ என கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.