ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பை சேர்ந்தவர் முருகவனம். இவருக்கு சேதுநாராயணபுரம் பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோட்டத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் 120 அடி ஆழமுள்ள நீர்ப்பாசன கிணறு பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த கிணறு அருகே செட் அமைத்து மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த அறையில் தான் காவலாளி தங்கி வந்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கிணறு முழுவதும் நீர் நிரம்பி இருந்தது.
இந்நிலையில் பிற்பகலில் திடீரென கிணற்றில் நான்கு புறமும் உள்ள சுற்று சுவர் சரிந்து தண்ணீரில் விழுந்தது. இதனால் அருகில் அமைக்கப்பட்டு இருந்த செட் மற்றும் அதில் இருந்த மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் நீரில் விழுந்தது. சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த விவசாயிகள் வந்து பார்த்த போது தொடர்ந்து கிணற்றில் மண் சரிந்து, மின் ஒயர்கள் அறுந்து கிடந்தது.
இதுகுறித்து விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து கிணற்றில் மண் சரிந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். சுற்றுச்சுவர் சரியும் போது மோட்டார் செட்டிற்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.