2022-ல் உலக அளவில் முடங்கிய இணையதள சேவைகள் குறித்த பட்டியலை டவுன் டிடெக்டர் தளம் வெளியிட்டுள்ளது. இதில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற முன்னணி தளங்களும் அடங்கும்.
இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் இணைய மயமாகிவிட்டது. கல்வி துவங்கி வணிகம், பணி, நிதி சார்ந்த சேவைகள், அரசின் இயக்கம் என அனைத்தும் இணையத்தை சார்ந்தே இயங்கி வருகின்றன. இருந்தாலும் சமயங்களில் இந்த சேவையை மக்களுக்கு வழங்கி வரும் இணையதள நிறுவனங்களின் சேவை பல்வேறு காரணங்களுக்காக முடங்கி விடுகின்றன.
அந்த தருணங்களில் சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..’ என கண்ணதாசன் எழுதிய அந்த பாடல் வரியை ஒவ்வொரு பயனரும் எதார்த்த வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
அப்படி 2022-ல் முடங்கிய சில தளங்களின் சேவை குறித்து பார்ப்போம். அண்மையில் ட்விட்டர் தள சேவையை சில பயனர்களால் கணினியில் பயன்படுத்த முடியாமல் முடங்கியது கூட இதற்கு ஒரு உதாரணம். இந்த நிலையில் இணையதள சேவை முடக்கத்தை உலக அளவில் நிகழ் நேரத்தில் சுட்டிக்காட்டும் டவுன் டிடெக்டர் தளம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஸ்னாப்சாட்: கடந்த ஜூலை மாதம் ஸ்னாப்சாட் பயனர்கள் போட்டோ அப்லோட் செய்வதில் சிக்கலை எதிர்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் இது நீடித்தது. இது குறித்து டவுன் டிடெக்டர் தளத்தில் 3 லட்சம் பேர் தெரிவித்திருந்தனர்.
ட்விட்டர்: கடந்த ஜூலை 14-ம் தேதி ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் சேவைகள் முடங்கி இருந்தன. ட்வீட்கள் லோடு ஆகவில்லை, புதிய ட்வீட்களை பார்க்க முடியவில்லை என சொல்லி 5 லட்சம் பயனர்கள் டவுன் டிடெக்டர் தளத்தில் தெரிவித்திருந்தனர். அண்மையிலும் ட்விட்டர் சேவைகள் பாதிக்கப்பட்டு இருந்தன.
இன்ஸ்டாகிராம்: ஜூலையில் ட்விட்டர் சேவைகள் முடங்கிய அதே நாளில் இன்ஸ்டாகிராம் சேவைகளும் அடுத்த சில மணிகளில் முடங்கின. சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த முடக்கம் குறித்து 6 லட்சம் பயனர்கள் டவுன் டிடெக்டர் தளத்தில் தெரிவித்தனர். பெரும்பாலான பயனர்களால் இன்ஸ்டா சேவையை முழுவதும் அக்சஸ் செய்ய முடியவில்லை என தெரிவித்திருந்தனர்.
வாட்ஸ்அப்: மெட்டா நிறுவனத்தின் மற்றொரு அங்கமான வாட்ஸ்அப் சேவைகள் கடந்த அக்டோபர் 25-ம் தேதி சுமார் 2 மணி நேரம் முடங்கியது. இந்த முடக்கம் உலகம் முழுவதும் உள்ள அதன் 2 பில்லியன் பயனர்களை பாதித்தது. சுமார் 2.9 மில்லியன் பேர் அது குறித்து டவுன் டிடெக்டர் தளத்தில் தெரிவித்திருந்தனர். அப்போது பயனர்கள் மெசேஜ் செய்ய முடியாமல் தவித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸ்பாட்டிஃபை: 2022-ன் மிகப்பெரிய சேவை முடக்கத்தை எதிர்கொண்டது ஸ்பாட்டிஃபை. கடந்த மார்ச் 8-ம் தேதி இந்த தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்களால் தங்களுக்கு பிடித்த பாடல் மற்றும் பாட்காஸ்ட்களை ஸ்ட்ரீம் செய்ய முடியாமல் தவித்துள்ளனர்.
இந்த தளங்கள் தவிர டிஸ்கார்டு, ராப்லக்ஸ், கால் ஆப் ட்யூட்டி, ரெடிட் மற்றும் டிக் டாக் போன்ற சேவைகளும் உலக அளவில் 2022-ல் பாதிக்கப்பட்டுள்ளன.