அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) நேற்று காலமானார். இவர் 25 செப்டம்பர் 1929-ல் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரமான பாஸ்டனில் பிறந்தவர். இவரின் தந்தை லூ வால்டர்ஸ் ஓர் இரவு விடுதி உரிமையாளராக இருந்தவர். பார்பரா வால்டர்ஸ் 1951-ம் ஆண்டு தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சில ஆண்டுகள் விளம்பரதாரராகப் பணியாற்றியிருக்கிறார்.
1953-ம் ஆண்டு குழந்தைகளுக்கான 15 நிமிட “ஆஸ்க் தி கேமரா” என்ற நிகழ்ச்சியை தயாரிக்கத் தொடங்கினார். பின்னர், 1955-ம் ஆண்டு சி.பி.எஸ் சேனலில் “தி மார்னிங்” என்ற நிகழ்ச்சியில் எழுத்தாளரானார். அதன் பிறகு, 1976-ம் ஆண்டில், அமெரிக்க மாலை நேர செய்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
அன்றைய காலகட்டத்திலேயே பெண் தொகுப்பாளராகப் பணியாற்றி பிரபலமானவர் பார்பரா வால்டர்ஸ். இவர் அமெரிக்க ஜனாதிபதிகள், உலகத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றோரை பேட்டி எடுத்திருக்கிறார். ரிச்சர்ட் நிக்சன் முதல் பராக் ஒபாமா வரை ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியையும் நேர்காணல் செய்த முதல் பெண்மணி இவர்தான். எந்தவித தளர்ச்சியும் இல்லாமல் தன்னுடைய நேர்காணலில் பங்கு பெறுவார்.
வால்டர்ஸின் செய்தித் தொடர்பாளர் சிண்டி பெர்கர் ஒரு நிகழ்ச்சியில், “பார்பரா ஒரு பெண் பத்திரிகையாளர் மட்டுமின்றி அனைத்து பெண்களுக்கும் முன்னோடியாக இருப்பவர்” என்றார். 2000-ம் ஆண்டில், அவர் தேசிய தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
இவர் 2014 -ம் ஆண்டு அதாவது தனது 84-ம் வயதில் ‘தி வியூ’ என்ற நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஆனால் அதன்பின் இரண்டு ஆண்டுகள் பகுதிநேர பங்களிப்பாளராக ஏ.பி.சி நியூஸில் இருந்தார்.
பார்பரா வால்டர்ஸ் தன்னுடைய செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி (Emmy) விருதுகளை வென்றிருக்கிறார். தன்னுடைய இந்த நீண்டகால பத்திரிகை துறை வாழ்க்கையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.